கடந்த சில வாரங்களாக மதிமுகவில் நடைபெறும் பிரச்சனை பெருமளவில் பேசப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் வைகோவுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு உதவியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது தலைவர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

மேலும் “என்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது” என வைகோ சமீபத்தில் கூறியது அவரது கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு மல்லை சத்யா, தனது மகன் துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார் என கண்ணீர் விட்டு வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் மல்லை சத்யாவை துரோகி என வைகோ குறிப்பிட்டதற்கு மதிமுகவினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் அருகே மதிமுக சார்பில் நகர செயலாளர் பாபு ஏற்பாட்டில் மல்லை சத்யா குறித்து வைகோ தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் படி தங்களது வாகனங்களில் உள்ள மதிமுக கொடியை 100க்கும் மேற்பட்ட மதிமுகவினர் அகற்றி தலையை சுற்றி தூக்கி எறிந்தனர்.

பின்னர் அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 32 ஆண்டுகளாக பயணித்துள்ள மல்லை சத்யாவை, மாத்தையாவோடு ஒப்பிட்டு வைகோ பேசுவதும், தனது மகனுக்கு முடி சூட்ட நினைப்பதும் குறித்து வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாமல்லபுரம் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.