கடந்த சில வாரங்களாக மதிமுகவில் நடைபெறும் பிரச்சனை பெருமளவில் பேசப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் வைகோவுடன் இணைந்து அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு உதவியாக இருந்த கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா மீது தலைவர் வைகோ பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.
மேலும் “என்னுடன் மல்லை சத்யா பல போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக அவர் துரோகம் செய்யவில்லை என்றெல்லாம் சொல்ல முடியாது” என வைகோ சமீபத்தில் கூறியது, அவரது கட்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மல்லை சத்யா, தனது மகன் துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் கொடுக்கிறார் என கண்ணீர் விட்டு தனது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சுமத்தியதற்கும், அவைத் தலைவராக செயல்பட்ட திருப்பூர் துரைச்சாமி குறித்து வைகோ தொழிற்சங்கத்திற்கு சொந்தமான ரூபாய் 350 கோடி சொத்தை அபகரித்துக் கொண்டு துரோகம் செய்து விலகினார் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனை அடுத்து அவற்றிற்கு எதிராக திருப்பூர் துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, “வைகோவிற்கு நெருக்கடியான காலத்தில் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக திமுகவிலிருந்து விலகினேன். ஆனால் நான் 350 கோடி ரூபாய் சொத்துக்களை அபகரித்ததாக வைகோ கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.
நான் கடந்த 1960 ஆண்டு முதல் தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்துள்ளேன். தொழிற்சங்கத்தின் சொத்து என்பது கட்சி உரியது அல்ல, சங்கத்திற்கு உரியது. அதன் அடிப்படை விவரமே தெரியாமல் வைகோ கூறியுள்ளார். இதற்கு எதிராக வைகோவிற்கு 7 கடிதங்கள் எழுதியுள்ளேன்.
ஆனால் ஒரு கடிதத்திற்கு கூட அவரால் பதில் அளிக்க முடியவில்லை. மதிமுகவில் பொருளாளர் பதவியில் வைகோ தான் கையெழுத்திட்டு எடுத்து செலவு செய்து கொண்டிருந்தார். இதெல்லாம் பின் நாட்களில் தெரிய வந்தது. அப்படி இருக்க வைகோ எப்படி யோக்கியத்தை பற்றி பேச முடியும். திமுகவை ஆதரிப்பது என முடிவு செய்துவிட்டால், தனி கட்சி எதற்காக நடத்த வேண்டும்.
திமுகவை மதிமுக உடன் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதானே? கட்சியில் மல்லை சத்யா இருந்தால் துறை வைகோவின் பேச்சு எடுபடாது என்பதற்காக அவர் மீது துரோகி பட்டம் சுமத்தி வெளியேற்ற பார்க்கிறார்கள். சமீப காலங்களாக வைகோவிற்கு மனநலம் பாதித்துவிட்டது அவருக்கு நாம் ஒன்றும் செய்ய தேவை இல்லை அவர் செய்வதற்கு அவரே அனுபவிப்பார்” என திருப்பூர் துரைச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
