திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட முன்னேற்றக் கழக அரசியல் என்றால் ? அது பெரியார் அரசியல், சமூக நீதி அரசியல். அந்த சமூக நீதி அரசியலுக்கு நெருக்கடி தர வேண்டும் என்பதுதான்.  திமுகவை வீழ்த்தாமல் பெரியாரியத்தை வீழ்த்த முடியாது.

பெரியாரியத்தை வீழ்த்தாமல்…  சனாதனம் இங்கே காலூன்ற முடியாது. பார்ப்பனர்கள் இங்கே கோலோச்ச முடியாது. ஆகவே அவர்களுக்கு குறி திமுக. இடையிலே எங்களை போன்றவர்களை அவர்கள் சீண்டுவார்கள்.  ஆனால் திருமாவளவன் குறியல்ல அவர்களுக்கு…  திருமாவளவன் அங்கம் வகிக்கும் திமுக கூட்டணி சிதற வேண்டும்.

திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும். திமுகவை தனிமைப்படுத்த வேண்டும். திமுகவை வீழ்த்தினால் தான் பெரியார் அரசியலை வீழ்த்த முடியும். அதுதான் அவர்களின் நோக்கம். ஏன் பெரியார் அரசியலை வீழ்த்த வேண்டும்? பெரியார் அரசியல் வலிமை இழந்தவர்களை வலிமை பெறச் செய்கிறது. பெண்களை வலிமை பெறச் செய்கிறது. ஒதுக்கப்பட்டவர்களை வலிமை பெறச் செய்கிறது.

பிற்படுத்தப்பட்டவர்களை வலிமை பெறச் செய்கிறது. பார்ப்பனர் அல்லாதோரை ஒருங்கிணைக்கிறது, அதுதான் பெரியார் அரசியல். சிங்கராயர் சொன்னார்…..  மூன்று பெரிதா ? 97 பெரிதா என்றார். நீங்கள் இயல்பாக 97 பெரிது என்றீர்கள்…  மூன்று சிறியது.  மூன்று சதவீதமாக இருக்கிற பார்ப்பனர்கள் சிறுபான்மையினர்.. 97 சதவீதமாக இருக்கிற பார்ப்பனர் அல்லாதவர்கள் பெரும்பான்மை. இது பெரியார் பார்வை. ஆனால் அவன் அந்தப் பார்வை மக்கள் பெற்றுவிடக் கூடாது என்பதற்காக கையாளுகிற பார்வை தான் இந்துத்துவா பார்வை..

இந்துக்கள் பெரும்பான்மை,  இந்துக்கள் அல்லாதவர்கள் சிறுபான்மை.  அவன் பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்று பார்க்கவில்லை. நான் தான் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று பார்க்கிறோம். அதனால் பிராமணர் 3 சதவீதம் தான்,  அவன்  சிறுபான்மை தானே என்று நாம் கருதுகிறோம். அனால் அவர்களின் அரசியல் இந்துக்கள் – இந்துக்கள் அல்லாதவர்கள் என்கிற அரசியல் என தெரிவித்தார்.