இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் வந்துள்ள ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த வோல்கர் (Vlogger) அலெக்ஸ் வெல்டர் (Alex Welder) என்பவர், நாட்டில் தான் பார்த்த இடங்களிலேயே “மிகவும் சுத்தமான இடம்” எது என்று கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ‘இந்தியாவில் நான் பார்த்ததிலேயே மிகச் சுத்தமான இடம்’ என்ற தலைப்புடன் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில், தெற்கு கோவாவில் (South Goa) தான் பெற்ற அனுபவத்தை அவர் விவரித்துள்ளார்.
கோவா என்றாலே ஒரே கொண்டாட்டம், அதிக சுற்றுலாப் பயணிகள், குப்பைகள் நிறைந்த இடமாகத்தான் இருக்கும் என்று தான் நினைத்திருந்ததாகவும், ஆனால் தெற்கு கோவா அதற்கு முற்றிலும் மாறுபட்டு இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கலாபிபாகா (Galgibaga) கடற்கரையில் நடந்து சென்றபோது, ஒரு துண்டு குப்பையைக்கூட பார்க்கவில்லை என ஆச்சரியத்துடன் அவர் கூறியுள்ளார்.
View this post on Instagram
தெற்கு கோவாவில் உள்ள கலாபிபாகா கடற்கரையை சுற்றிக்காட்டிய அலெக்ஸ் வெல்டர், இது ஆமைகள் முட்டையிடும் பகுதி என்றும், மிகவும் அழகாக இருப்பதாகவும் வியந்துள்ளார். “இந்த இடம் உண்மையிலேயே வெப்பமண்டலப் பகுதியாகத் தெரியவில்லை. ஐரோப்பிய நாடு ஒன்றில் இருப்பது போலவே இருக்கிறது,” என்று அதன் அழகை ஐரோப்பாவுடன் ஒப்பிட்டுள்ளார்.
மேலும், இங்கு ஆங்காங்கே குப்பைக் கொள்கலன்கள் இருப்பதாகவும், இது அரிதான ஒன்று என்றும் அவர் பாராட்டியுள்ளார். இந்த வீடியோ இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகியுள்ளது. பல பயனர்கள் தெற்கு கோவாவின் அழகை உறுதிசெய்தாலும், சிலர் அதிக சுற்றுலாப் பயணிகள் படையெடுக்காமல் இருக்க, இந்த இடத்தைப் பற்றி அதிகம் பகிர வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
