பாகிஸ்தானில், பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாகச் சமஸ்கிருத மொழி மீண்டும் வகுப்பு அறைகளுக்குத் திரும்பியுள்ளது. லாகூர் அறிவியல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் (LUMS), சமஸ்கிருதத்தில் நான்கு கிரெடிட் கொண்டப் படிப்பைத் தொடங்கியுள்ளது.
மாணவர்கள் மற்றும் அறிஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு மகாபாரதத் தொலைக்காட்சித் தொடரின் உருது மொழிப் பாடமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் பல்கலைக்கழக நூலகத்தில், பாகிஸ்தானில் மிகவும் அரிய சமஸ்கிருதப் பனை ஓலை ஆவணங்கள் உள்ளதாகக் குர்மானி மையத்தின் இயக்குநர் டாக்டர் அலி உஸ்மான் காஸ்மி தெரிவித்துள்ளார்.
மேலும், 10-15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து கீதை மற்றும் மகாபாரதத்தின் அறிஞர்களைக் காண முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சிக்குக் காரணமான ஃபோர்மேன் கிறிஸ்தவக் கல்லூரியின் டாக்டர் ஷாஹித் ரஷீத் என்பவர், “சமஸ்கிருதம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துடன் பிணைக்கப்பட்டது அல்ல, இது நமக்கும் சொந்தமானது” என்று கூறி, சமஸ்கிருத இலக்கண அறிஞர் பாணினியின் கிராமம் இந்த பிராந்தியத்தில் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
