மிகவும் கடினமான சூழலில் சிக்கிக்கொள்பவர்கள், அதாவது பனிப்பாறைகளில் வழிதவறுபவர்கள், கடலில் தத்தளிப்பவர்கள் அல்லது மலை உச்சியில் பலம் இழந்து நிற்பவர்களுக்கு இந்த அனுபவம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனைத்தான் விஞ்ஞானிகள் ‘தேர்டு மேன் சிண்ட்ரோம்’ என்கிறார்கள்.

நாம் தனியாகத் தவிக்கும் போது, நமக்குப் பின்னால் அல்லது பக்கத்தில் யாரோ ஒரு நபர் அமைதியாக நடந்து வருவது போலவும், நம்மை உற்சாகப்படுத்துவது போலவும் ஒரு உணர்வு ஏற்படும்.

1914-ல் அண்டார்டிகா பயணத்தின் போது எர்னஸ்ட் ஷேக்லட்டன் மற்றும் அவரது குழுவினர் உறைபனியில் சிக்கியபோது, தங்களது குழுவில் இல்லாத நான்காவது நபர் ஒருவர் உடன் வந்ததை அனைவரும் உணர்ந்துள்ளனர். பாதுகாப்பான இடத்திற்கு வந்த பிறகுதான், அது நிஜமான மனிதர் அல்ல என்பதை அவர்கள் உணர்ந்தனர்.

இது பேய்களோ அல்லது ஆவிகளோ அல்ல என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு மனிதன் உச்சக்கட்ட மன அழுத்தத்திலும், மரண பயத்திலும் இருக்கும்போது, அவனது மூளை ஒரு பாதுகாப்பு கவசமாக இந்த ‘மாயக் கூட்டாளியை’ உருவாக்குகிறது. இது ஒரு தற்காப்பு வழிமுறை (Coping Mechanism) என்கிறார்கள் நிபுணர்கள்.