கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தான் முதல்வர் ஆவது குறித்துக் காலம்தான் பதில் சொல்லும் எனத் தெரிவித்துள்ளார். மக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எனப் பலரும் தான் முதல்வராக வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் கட்சியின் மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலமே பதில் சொல்லும் என்று மர்மமாகப் பதிலளித்த அவர், தொண்டர்கள் தங்களுக்குப் பிடித்தமான தலைவருக்கு ஆதரவாக முழக்கமிடுவதைத் தடுக்க முடியாது என்றும் கூறினார்.

பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வு குறித்துப் பேசிய அவர், இந்த முடிவை எடுக்கும் போது மெட்ரோ ரயில் நிறுவனம் மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைவராக மத்திய அரசு அதிகாரி இருப்பதால் அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், பெங்களூரு திரும்பியவுடன் இது குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் கொடுக்கத் தங்களுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த டி.கே.சிவக்குமார், அந்த நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் கட்டண உயர்வின் பின்னணி குறித்து ஆய்வு செய்யப்போவதாகவும் விளக்கமளித்தார்.