தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில நிர்வாகி சாட்டை துரைமுருகன் பேசிக்கொண்டிருந்தபோது தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களுடன் ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு நிலவியது.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான சாட்டை துரைமுருகன், தனது யூடியூப் தளம் வாயிலாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, கட்சியின் கொள்கைகள் மற்றும் தவெக தொண்டர்களின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். இது சமூக வலைதளங்களில் இரு தரப்பினரிடையே ஏற்கனவே கடும் மோதல் போக்கை உருவாக்கியிருந்தது.

இந்த நிலையில், தேனி பங்களாமேடு பகுதியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் சிறப்பு பேச்சாளராகப் பங்கேற்றார். அவர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு திரண்ட தவெக தொண்டர்கள் திடீரென விசில் அடித்தும், கூச்சலிட்டும் இடையூறு செய்யத் தொடங்கினர்.

இதனால் ஆவேசமடைந்த சாட்டை துரைமுருகன், தவெக மாவட்டச் செயலாளர் லெஃப்ட் பாண்டி மற்றும் அக்கட்சியினரை நோக்கி சவால் விடுத்தார். “உங்களுக்குத் துணிவிருந்தால் தனியாகக் கூட்டம் போட்டுப் பேசுங்கள்” எனக் குறிப்பிட்டதுடன், சில கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். இது அங்கிருந்த தவெகவினரை மேலும் கொதிப்படையச் செய்தது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த வழியாக காரில் வந்த தவெக நிர்வாகிகளை நாதக தொண்டர்கள் வழிமறித்தனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தவெக நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் உருவானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இந்தச் சம்பவத்தால் அந்த  பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும், பதற்றமான சூழலும் நிலவியது.