தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒரே அரசியல் எதிரி திமுக-தான் என்றும், அதிமுக தங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது, தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதன்மையான மற்றும் ஒரே எதிரி திமுக மட்டும் தான். தற்போது பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக-வை நாங்கள் ஒரு கட்சியாகவே கருதவில்லை; அவர்கள் எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஒரே நாளில் 10,000 பேர் மனு அளித்துள்ளனர். நேரில் வந்து மனு அளிக்க முடியாமல் சுமார் 15,000 பேர் திரும்பிச் சென்றதால், தற்போது தொண்டர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் விருப்ப மனுக்களைப் பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நெருங்கும் வேளையில், மிகக் குறுகிய காலக்கட்டத்தில் வலுவான கூட்டணி அமையும். திமுக மற்றும் அதிமுக ஆகிய கூட்டணிகளில் இடம் கிடைக்காத சில கட்சிகள், தவெக-வுடன் இணைய வாய்ப்புள்ளது என்று கூறினார்.