உடல் பருமன் உலகளவில் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, எட்டு பேரில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளார். இது இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனை மனதில் கொண்டு, சீனாவைச் சேர்ந்த இன்ஸ்டா360 நிறுவனம், தனது ஊழியர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

இன்ஸ்டா360 நிறுவனம், உடல் எடையைக் குறைக்கும் ஊழியர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பரிசுத் தொகை வழங்கும் ‘மில்லியன் யுவான் எடை இழப்பு சவால்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு அரை கிலோ எடை குறைப்பிற்கும் சுமார் 6,000 ரூபாய் வெகுமதியாக வழங்கப்படுகிறது. ஆனால், சவாலில் வென்ற பிறகு மீண்டும் எடை கூடினால், ஒவ்வொரு அரை கிலோவிற்கும் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஊழியர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செய்தி இணையத்தில் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.