பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ரவலகோட் பகுதியில், அரசுக்கு  எதிராக மக்கள் நடத்திய போராட்டம் செவ்வாய்க்கிழமையுடன் 22-வது நாளை எட்டி விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்குள்ள ஈத்கா மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மத்தியில் பேசிய தலைவர்கள், இனி இந்த பிராந்தியம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கருத முடியாது என்றும், தங்களது உரிமைகளுக்காக இந்தியாவின் வலுவான ஆதரவை நாட வேண்டியிருக்கும் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசமான நிர்வாகம், கடுமையான பொருளாதார நெருக்கடி, கட்டுக்கடங்காத பணவீக்கம் மற்றும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவே இந்த மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

போராட்டக் குரலை ஒடுக்குவதற்காக ஜூன் 5 முதல் அங்கு முழுமையான இன்டர்நெட் முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதிலும், மக்களின் வேகம் குறையவில்லை. மாறாக, பாகிஸ்தான் அரசு கடந்த இரண்டு வாரங்களாக உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை முழுமையாகத் தடை செய்து பொருளாதார முற்றுகை நடத்தியதால், இந்தப் போராட்டம் காட்டுத்தீ போலப் பரவியுள்ளது.

 

இந்த மாபெரும் மக்கள் எழுச்சியை முன்னெடுத்து நடத்தி வரும் பிரபல சமூக ஆர்வலர் சர்தார் அமன் கான் பேசுகையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானின் பகுதி அல்ல; எங்களை விட பாகிஸ்தானுக்குத்தான் எங்கள் பிராந்தியம் அதிகம் தேவைப்படுகிறது” என்று அதிரடி முழக்கமிட்டார். மேலும், ஜூன் 9 முதல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே மக்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தடை நீடித்தால், தங்களுக்கு உதவக் கோரி இந்தியாவை நோக்கித் திரும்ப வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது பிராந்தியத்தின் ஒட்டுமொத்த அரசியல் நிலப்பரப்பையே மாற்றி, இஸ்லாமாபாத் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும் என்பது இவர்களின் திட்டமாக உள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் வீடியோக்களில், “நாங்கள் பாகிஸ்தானின் அங்கமல்ல” என்று மக்கள் பிரகடனம் செய்வதோடு, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரை முற்றிலுமாக நிராகரித்து, தங்களால் ஒரு சர்வாதிகாரியை சகித்துக்கொள்ள முடியாது என்றும் ஆவேசமாக முழங்கி வருகின்றனர். இந்த எதிர்ப்பு அலை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மட்டும் நின்றுவிடாமல், வெளிநாடுகளில் வாழும் காஷ்மீரிகள் மூலமாக உலக நாடுகளிலுள்ள பாகிஸ்தான் தூதரகங்கள் முன்பாகவும் போராட்டமாக வெடித்துள்ளதால் பாகிஸ்தான்  அரசு செய்வதறியாது திகைத்து நிற்கிறது.