சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, அனைவரையும் ஆச்சரியத்திலும் பரவசத்திலும் ஆழ்த்தியுள்ளது. இது, ஒரு தாயின் அன்பு மற்றும் தைரியத்தை எடுத்துக்காட்டும் அற்புதமான காட்சி. ‘இந்த உலகின் மிகப்பெரிய வீரர் தாய் தான்’ என்பதை உண்மையாக்கும் வகையில், ஒரு சாதாரண கோழி, தனது குஞ்சுகளை காக்க விஷமிகு கோப்ரா பாம்புடன் உயிரைப் பணயம் வைத்து மோதியுள்ளது.

எக்ஸ் கணக்கில் பகிரப்பட்ட இந்த 28 வினாடிகள் வீடியோவை, 70,000-க்கும் மேற்பட்டோர் பார்த்து, தாயின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர். ‘டைனோசரின் வாரிசு’ என்று கேப்ஷனில் குறிப்பிடப்பட்ட இந்த வீடியோ, ஒரு தாயின் தைரியத்தை  உலகிற்கு உணர்த்தியுள்ளது.

வீடியோவில், கோழி தனது குஞ்சுகளுடன் இருக்கும்போது, திடீரென ஒரு கொடிய கோப்ரா பாம்பு அங்கு நுழைகிறது. குஞ்சுகளை தனது இரையாக்க முயலும் அந்த பாம்பை பார்த்ததும், கோழி பயமின்றி பாய்ந்து, தனது கூர்மையான அலகால் தொடர்ந்து தாக்குகிறது. கோழியின் மூர்க்கமான தாக்குதலால் பதறிப்போன கோப்ரா, அங்கிருந்து தப்பிக்க முயல்கிறது.

ஆனால், கோழி விடாமல் பின்தொடர்ந்து, தன் குஞ்சுகளுக்கு ஆபத்து நீங்கும் வரை தாக்குதலை நிறுத்தவில்லை. இந்த அசாதாரண தைரியத்தை கண்ட இணையவாசிகள், “எந்த உருவில் இருந்தாலும், தன் பிள்ளைகளுக்காக ஒரு தாய் எந்த எல்லைக்கும் செல்லும்” என்றும், “தைரியம் உருவத்தில் இல்லை, உள்ளத்தில் உள்ளது” என்றும் புகழ்ந்தனர். பலர் இந்த கோழியை ‘ஆண்டின் சிறந்த தாய்’ என்று கூட அழைத்து பாராட்டியுள்ளனர்.