தாம்பரம் அருகே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற செல்போன் மற்றும் ஜவுளி கடைகளில் துளையிட்டு ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த வழக்கில், ஹரியானாவைச் சேர்ந்த இர்பான் என்பவர் முக்கியம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். கைரேகை ஆதாரங்களைப் பயன்படுத்தி, போலீசார் அவரை விரிவாக தேடினர். செல்போன் சிக்னலின் அடிப்படையில் இர்பான் தனது சொந்த ஊரான மேவாட் பகுதியில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தாம்பரம் துணை ஆணையாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் ஹரியானாவிற்கு விரைந்தனர். பின்னர் மேவாட் பகுதியில் பதுங்கியிருந்த இர்பானை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்த போலீசார், உள்ளூர்வாசிகள் எதிர்ப்பை சமாளித்து அவரை கைது செய்தனர். பின்னர் இர்பானை டெல்லிக்கு அழைத்து வந்த போலீசார், அங்கிருந்து விமானம் மூலம் அவரை சென்னைக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இர்பான் கான் ஏற்கனவே 2023 டிசம்பரில் கண்டெய்னர் லாரி மூலம் செல்போன்களை கொள்ளையடித்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். சிறை தண்டனை முடிந்து இரண்டே மாதங்களில் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு குற்றவாளி முகமது அலியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.