ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அபிமன்யு என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அவரது மனைவி ராப்பிடோ வாகனத்தில் செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். உடனடியாக ராப்பிடோ வாகனம் வந்த நிலையில் டிரைவர் அந்தப் பெண்ணுக்கு தொடர்பு கொண்டு “நான் உங்கள் கட்டிடத்தின் வெளியே இருக்கிறேன்…. வீட்டின் நம்பரை சொல்லுங்கள்…மேலே வருகிறேன்…இது என்னுடைய நம்பர்..”என்று செய்தி அனுப்பியுள்ளார்.

இதனை பார்த்த அந்த பெண் அதிர்ச்சியடைந்த நிலையில் தனது கணவரிடம் கூறினார். உடனடியாக அபிமன்யு கட்டிடத்தின் கீழே நின்று கொண்டிருந்த டிரைவரை சந்தித்து அவரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது டிரைவரிடம் இருந்த ஆவணங்களை சரிபார்த்தபோது கடந்த 2 வருடங்களாக வேறொரு நபரின் ஐடியை பயன்படுத்தி வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது.

பின்னர் டிரைவர் தன்னை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சிய நிலையில் அதனை வீடியோவாக பதிவு செய்து அபிமன்யு சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடாது நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.