பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கனமழையால், வெள்ளப் பெருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி ஆகிய பகுதிகளிலும் மேகவெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது.
பாகிஸ்தானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி, 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 31 வரை 854 பேர் உயிரிழந்து, 1,100 பேர் காயமடைந்துள்ளனர்.
செனாப் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது, மேலும் முல்தான் மாவட்டத்தில் ராவி ஆற்றுடன் வெள்ளம் கலக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் அளித்த பேட்டி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மழை வெள்ளத்தை ‘ஆசீர்வாதமாக’ (Blessing) பார்க்க வேண்டும் எனக் கூறிய அவர், மக்கள் வெள்ள நீரை வீணாக கால்வாயில் விடாமல், தொட்டிகள் மற்றும் கண்டெய்னர்களில் சேமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பெரிய அணைகளை கட்டுவதை விட, உடனடியாக முடியக்கூடிய சிறிய அணைகளை கட்டுவதே சிறந்தது என்றும், நீரை கட்டாயம் சேமிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த விசித்திரமான அறிவுரை, பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல், வெள்ளத்தை ‘ஆசீர்வாதம்’ என அழைத்ததற்காக சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
