அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்தியாவுக்கு மேலும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இந்தியாவின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்கா 25% வரி விதித்ததுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக மேலும் 25% கூடுதல் வரி விதித்து, மொத்தம் 50% வரியை அறிவித்தது.

இதனால், இந்தியா, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்சாமல், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்கிறது.

இந்நிலையில், ரஷ்யா ஒரு பேரலுக்கு 3 முதல் 4 அமெரிக்க டாலர் வரை தள்ளுபடி செய்து கச்சா எண்ணெய் வழங்க முன்வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த எண்ணெய் செப்டம்பர் இறுதி மற்றும் அக்டோபர் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய-உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் பணத்தை ரஷ்யா உக்ரைனுக்கு எதிரான போரில் ஆயுதங்கள் வாங்க பயன்படுத்துவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசிய பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது.