சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாடு உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களைச் சந்தித்தார்.
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடந்த இந்த சந்திப்பு, உலக ஊடகங்களால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்பட்டது. மோடி, ஜி, புதின் ஆகியோரின் சந்திப்பு, உலக அரசியல் களத்தில் புதிய கூட்டணியின் அடையாளமாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சித்து, எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டிரம்பின் வரி விதிப்பு கொள்கைகள், இந்தியாவையும் ரஷ்யாவையும் மீண்டும் ஒன்றிணைத்து, இந்தியா-ரஷ்யா பிரிவை உருவாக்க பல தசாப்தங்களாக அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளை அழித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியவை வலுவான கூட்டாளிகளாக மாறியிருப்பதற்கு டிரம்பின் தவறான மற்றும் பேரழிவு தரும் வரிக் கொள்கைதான் காரணம் என்று அவர் கூறினார். இந்த முடிவு, கிழக்கு ஆசியாவில் சீனாவுக்கு சாதகமாக நிலைமையை மறு வடிவமைக்க வாய்ப்பளித்துவிட்டதாகவும் பால்டன் விமர்சித்தார்.
