திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். அங்கிருந்து  வீடு திரும்பிய அவர் சுக்காம்பட்டி பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மர்மநபர் ஒருவர் பழனிச்சாமியின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அவர் பழனிச்சாமியிடம் தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும், நீங்கள் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளீர்கள், அதற்கு வரி செலுத்தாமல் இருக்கிறீர்கள் என மிரட்டி உள்ளார்.

அதன்பின் அவர் கையில் இருந்த 1/4 பவுன் தங்க மோதிரத்தை பறித்துக் கொண்ட மர்ம நபர், வீட்டிற்கு செல்லுங்கள், நான் விசாரிக்க வருவேன் என்று கூறி அங்கிருந்து கிளம்பி விட்டார். இதையடுத்து பழனிச்சாமி ஊருக்குள் சென்று வருமானவரித்துறை அதிகாரி பற்றி கேட்டபோது அதுபோல யாரும் இங்கே வரவில்லை என கூறியுள்ளனர். இதனை கேட்டதும் தான் ஏமாந்து போனது தெரிய வந்தது. பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.