தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான ‘கௌரி’ சீரியல் நடிகை நந்தினி, பெங்களூருவில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மற்றொரு இளம் நடிகை தற்கொலை முடிவை எடுத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தை நிலைகுலையச் செய்துள்ளது.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நந்தினி, கன்னடத் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது தமிழில் வெற்றிகரமாகத் தடம் பதித்து வந்த நிலையில், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தமிழில் ஒளிபரப்பாகும் ‘கௌரி’ சீரியலில் துர்கா மற்றும் கனகா எனப் பெயர் கொண்ட இரட்டை கதாபாத்திரங்களில் நந்தினி நடித்து வந்தார். அவரது எதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர்களைப் பெற்றவர், திடீரென தற்கொலை செய்துகொண்டது ஏன் என்பது மர்மமாகவே உள்ளது.
தற்கொலைக்கான காரணம் குறித்துப் பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வளர்ந்து வரும் ஒரு இளம் நடிகை இப்படிப் பாதியிலேயே விடைபெற்றது ரசிகர்களையும், சக கலைஞர்களையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது.
