தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில் ஏராளமானோர் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு தயாராகி வந்தனர். திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அனைத்து அரசு காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என அறிவித்தது. சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது குறைந்த அளவில் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றதும் அனைத்து அரசு காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும் எனவும் அனைத்து இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. ஆனால் இதுவரை தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டிஎன்பிஎஸ்சி பணியிடங்களை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வு இந்த வருடமே நடத்தி முடிக்க வேண்டும் என தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.