
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மணிக்கிரன் விடுதி அருகே மேயா குளக்கரை என்ற பகுதி உள்ளது. இங்கு நேற்று காலை ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனை அந்த வழியாக சென்ற மக்கள் பார்த்த நிலையில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை ஒன்று அழுதபடி துணிப்பைக்குள் இருந்தது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்றனர். அங்கு மருத்துவ அலுவலர் குழந்தைக்கு முதலுதவி கொடுத்த நிலையில் குழந்தை நலமுடன் இருப்பதாக கூறினார். இதைத்தொடர்ந்து குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் குழந்தையை துணிப்பையில் வைத்து சாலை ஓரத்தில் வீசியது யார்? குழந்தையின் தாய் யார்? என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.