பீகார் மாநிலம் முசாபர்பூரில், 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் செல்போன் தவணைத் தொகையை (EMI) செலுத்த முடியாத மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முசாபர்பூர் சதர் காவல் எல்லைக்குட்பட்ட யாதவ் நகரில் வசித்து வந்த கிருஷ்ணா(18) என்ற மாணவன், வறுமை காரணமாக ஒரு மளிகைக் கடையில் வேலை செய்துகொண்டே தனது படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மெட்ரிக் தேர்வில் தோல்வியடைந்த கிருஷ்ணா, இந்த ஆண்டு மீண்டும் தேர்வு எழுதத் தயாராகி வந்துள்ளார். இதற்கிடையில், அவர் வாங்கிய செல்போனின் இ.எம்.ஐ தொகையைச் சரியான நேரத்தில் செலுத்த முடியாததால் கடும் நிதி நெருக்கடியில் இருந்துள்ளார்.

இது குறித்து அவரது தந்தை ஓம் பிரகாஷ் ஷா கண்டித்ததால் மனமுடைந்த கிருஷ்ணா, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

“என் மகன் மிகவும் அமைதியானவன், குடும்பச் சுமையைத் தாங்க அவன் மிகவும் கடினமாக உழைத்தான்” என்று அவரது தந்தை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் ‘EMI’ மோகத்தால் இளம் தலைமுறை சந்திக்கும் விபரீதங்களை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.