உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் அருகே யமுனா எக்ஸ்பிரஸ்வே (Yamuna Expressway) சாலையில் நடந்த ஒரு கோர விபத்தின் ‘லைவ்’ வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர வைத்து வருகிறது.

ஆக்ராவிலிருந்து நொய்டா நோக்கி அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரி (Canter), கட்டுப்பாட்டை இழந்து தனக்கு முன்னால் சென்ற லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. விபத்து நடந்த அதே நொடியில் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அந்த லாரிக்கு பின்னால் ஒரு காரில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள், அந்த லாரி அதிவேகமாகச் செல்வதைப் பார்த்து அதைத் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

அவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே கண் இமைக்கும் நேரத்தில் அந்த லாரி விபத்துக்குள்ளானது. மரணத்தைத் துல்லியமாகப் படம்பிடித்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.