கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடந்த பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொது நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார். அந்தக் துயரச் சம்பவத்தில் இருந்து மீண்டு வந்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார்.
அந்தக் கூட்டத்தில், த.வெ.க-வின் பயணம் மீண்டும் தொடரும் என்று அறிவித்தார். மேலும், மக்கள் சந்திப்புக்குத் தயாராகும் வகையில், தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரைத் தேர்வு செய்து மக்கள் பாதுகாப்புப் படையை உருவாக்கினார். இந்தப் பாதுகாப்புப் படையினருக்கு, ராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளைக் கொண்டு தீவிரப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய்யின் த.வெ.க., நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் சிறப்பு மக்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கூட்டம் முழுக்க முழுக்க உள்ளரங்க சந்திப்பாக நடைபெறும் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்ட 2,000 பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்களுக்குக் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெரிசல் எதுவும் ஏற்படாத வண்ணம், மக்கள் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து தொண்டர் படையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கட்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
