தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பல்வேறு நிறுவனங்கள் அரசுக்குச் நீர் வரி பாக்கி வைத்துள்ளதாகவும், இதனால் அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், அளவுக்கு அதிகமாக நீர் உறிஞ்சப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தப் புகார் குறித்துப் பொதுப்பணித் துறையிடம் விளக்கம் கேட்டது. அதற்குப் பொதுப்பணித் துறை தரப்பில், தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்கும் தனியார் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசா வீதம் தண்ணீர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
பொதுப்பணித் துறையின் பதிலைக் கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். “தனியார் நிறுவனங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை ரூ.20-க்கு விற்கின்றன. ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீருக்கு லிட்டருக்கு இன்னமும் ஒரு பைசாதான் வசூலிக்கப்படுகிறதா?” என்று நீதிபதிகள்கடும் கேள்வியை எழுப்பினர்.
மேலும், தாமிரபரணி ஆற்றில் எத்தனை நிறுவனங்கள் தண்ணீர் எடுக்கின்றன, ஒரு நாளைக்கு எடுக்கப்படும் தண்ணீரின் அளவு, இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு, மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயம் செய்த தண்ணீர் கட்டணத்தை ஏன் இன்னும் உயர்த்தவில்லை என்பது தொடர்பாக நெல்லை ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
