உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரால் தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தும் அனுபவம் குறித்து அன்யா விக் என்பவர் லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு, இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. டெல்லி பகுதியைச் சேர்ந்த அன்யா, இரவு 11 மணியளவில் ‘ஸொமாட்டோ செயலி மூலம் ‘பான்’ (Paan) ஆர்டர் செய்துள்ளார். அதனை வாங்க அவர் தனியாக வெளியே வந்தபோது, அந்த டெலிவரி ஊழியர் அவரிடம் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டுள்ளார். அன்யா பதில் பேசாமல் அமைதியாக இருந்தபோதும், அந்த ஊழியர் விடாமல், “இந்த வயதில் ஒரு பெண் பிள்ளையாக இருந்து கொண்டு பான் ஆர்டர் செய்கிறாயே?” என முகம் சுளிக்கும் வகையில் கமெண்ட் அடித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அன்யா, “நாங்கள் என்ன ஆர்டர் செய்கிறோம் என்பதைப் பார்த்துவிட்டு, எங்களிடமே வம்பு வளர்க்க டெலிவரி ஊழியர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என அந்நிறுவனத்தைக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரத்தில் அன்யா எழுப்பியுள்ள மற்றொரு முக்கியமான பயம், இன்று பல பெண்களின் எதார்த்தமாக உள்ளது. டெலிவரி ஊழியர் மீது புகார் அளித்தால் அவரது வேலை பறிபோகலாம், ஆனால், “அவரது இகோ (Ego) காயம் பட்டால், நான் எங்கு வசிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியும், இதனால் எனக்கு ஏதேனும் ஆபத்து வருமோ?” என்று அவர் அஞ்சியுள்ளார். இந்த பதிவிற்குப் பதிலளித்துள்ள ஸொமாட்டோ நிறுவனம், உடனடியாக ஆர்டர் ஐடியை வழங்குமாறு கேட்டுள்ளது. இதற்கிடையே, இந்த பதிவின் கீழ் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட இதுபோன்ற கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். உணவு வாங்கும்போது வீட்டில் யாரோ இருப்பது போலப் பாசாங்கு செய்வதாகப் பல பெண்கள் வேதனை தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற பகுதிநேர ஊழியர்களுக்குப் வாடிக்கையாளர்களிடம் எப்படி கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற முறையான பயிற்சியை நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
