சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சத்தியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தேவகோட்டை வட்டார விவசாயிகளுக்காக தேவகோட்டை நகர் வாரசந்தை அருகே 40 கடைகளுடன் உழவர் சந்தை செயல்பட்டு கொண்டிருக்கிறது. விவசாயிகளும், நுகர்வோர்களும் பயனடையும் விதமாக தற்போது சிறந்த முறையில் உழவர் சந்தை புதுப்பிக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் விவசாயிகள் அறுவடை செய்த காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை தகுந்த விலையில் நுகர்வோர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அதனால் தேவகோட்டை நகர் மக்கள் உழவர் சந்தையில் காய்கறிகளை தகுந்த விலையில் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தேவகோட்டை நகரை சுற்றியுள்ள விவசாயிகள் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் பொருட்டு தோட்டக்கலை துறை மூலமாக காய்கறிகள் பயிரிட காய்கறி விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் பெற்றுக் கொள்ளலாம். உழவர் சந்தையில் தங்கள் விலை பொருட்களை விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் உழவர் அடையாள அட்டை பெறுவதற்காகவும் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.