சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வி.மலம்பட்டி அருகே கன்னிமார்பட்டியில் ஆறுமுகம்(70) – யசோதை தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராஜேந்திரன் (30) என்ற மகன் இருக்கிறார். ராஜேந்திரன் சென்னையில் வேலை செய்து வந்தபோது அங்கு உடன் வேலை பார்த்து வந்த திருபுவனத்தைச் சேர்ந்த கற்பகவல்லி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பின் மனைவியை அழைத்து வந்து தன்னுடைய சொந்த ஊரில் விட்டுவிட்டு ராஜேந்திரன் மீண்டும் சென்னைக்கு சென்று வேலை பார்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் கற்பகவல்லிக்கும் அவரது மாமனாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யசோதை ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து கடந்த 2014 -ஆம் ஆண்டு கற்பகவல்லி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றுள்ளனர். இது தொடர்பாக ஆறுமுகம் – யசோதை ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செசன்ஸ் நீதிபதி சுமதி சாய் பிரியா குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்திற்கு ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் யசோதை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.