
தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான பொது தேர்வு நேற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பொதுத் தேர்விற்காக கிட்டத்தட்ட 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 1267 தனி தேர்வர்கள் உட்பட 24,338 மாணவ மாணவிகள் பொது தேர்வு எழுதுகின்றனர். பொது தேர்வின் முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இந்நிலையில் பன்னீர்செல்வம் பார்க் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த மையத்திற்கு 3 மாணவிகள் தேர்வு எழுத சென்றிருந்த நிலையில் அவர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை மறந்து வந்து விட்டனர். இதனால் மாணவிகள் தேர்வு மையத்திற்கு எப்படி செல்வது என்று தெரியாமல் மிகவும் பதற்றமான சூழலில் இருந்தனர். அப்போது அந்தப் பள்ளிக்கு பொது தேர்வை பார்வையிடுவதற்காக முதன்மை கல்வி அலுவலர் சுப்பராவ் அங்கு வந்திருந்தார். அவர் அந்த மாணவிகளிடம் சென்று “பதற்றப்பட வேண்டாம், உங்களுக்கு ஹால் டிக்கெட் எடுத்துக் கொடுக்கப்படும்” என்று கூறினார்.
அத்துடன் அந்த 3 மாணவிகளுக்கும் ஹால் டிக்கெட்டை பள்ளியில் உள்ள கணினி மூலம் டவுன்லோட் செய்து கொடுத்தார். அதன்பின் அவர்களின் தேர்வு மையம் தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இருந்தது தெரிய வந்தது. உடனே முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் மாணவிகளை தன்னுடைய காரில் அந்த தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து தங்களுக்கு உதவிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு அது 3 மாணவிகளும் நன்றியை கூறினர்.