புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி இருந்து அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். தற்போது 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்கள் விடுதியை விட்டு சென்றனர். இதனால் 9- ஆம் வகுப்பு வரை படிக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். கடந்த 3 நாட்களாக மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படவில்லை.

இதனால் கோபமடைந்த மாணவர்கள் விடுதி முன்பு அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது விடுதி சமையலர் 3 நாட்களாக மதுபோதையில் படுத்து உருண்டதாகவும், போதையில் இருந்ததால் சமைக்காமல் இருப்பதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். மேலும் விடுதி காப்பாளர், சமையலர் ஆகியோர் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபடுவதாகவும், உணவு வழங்காமல் பொருட்களை பதுக்குவதாகவும் மாணவர்கள் புகார் அளித்தனர்.

இதுகுறித்து அறிந்த ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் பிரவீனா மேரி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். இதற்கிடையே அன்னவாசல் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கராஜ், சாலைமதுரம் ஆகிவரும் விடுதிக்கு சென்று மாணவர்களுக்கு உணவு வழங்காதது குறித்து விவரம் கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ஆதி திராவிடர் நல தனி வட்டாட்சியர் கவுன்சிலர்களை வெளியேறுமாறு தெரிவித்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.