கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினரின் மகள் நதியா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நதியா பள்ளி விடுதியில் தங்கி இருந்து பள்ளிக்கு சென்று வந்துள்ளார். கடந்த வாரம் விடுமுறையில் வீட்டிற்கு வந்த நதியா விடுதிக்கு செல்லாமல் மூன்று நாட்களாக பேருந்தில் பள்ளிக்கு சென்று வந்தார். இதனால் நதியாவை சங்கீதா கண்டித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக தாய், மகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது உறவினர் இல்ல காதணி விழா முடிந்ததும் விடுதியில் தங்கி படிப்பதாக நதியா கூறியதற்கு சங்கீதா இப்பவே விடுதிக்கு செல் என கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நதியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சங்கீதா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நதியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.