இந்திய சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பு மாநாடு இலங்கை தலைநகரான கொழும்புவில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய பயண முகவர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் இந்திய தூதர் கோபால், இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்த்தனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் பேசும் போது “இலங்கையும் இந்தியாவும் கொள்கை, தேசிய, கலாச்சார ரீதியாக நெருங்கிய தொடர்பு கொண்ட நாடுகள். அனைத்திற்கும் மேலாக இலங்கைக்கு நம்பிக்கை பெற்ற நெருக்கமான நண்பனாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இலங்கை பிரச்சனையில் இருந்த சமயத்தில் எல்லாம் இந்தியா பெரிய உதவிகளை செய்துள்ளது. சமீபத்தில் கூட எங்களுக்கான கடனை 12 ஆண்டுகள் மாற்றி கொடுக்க இந்தியா தயாராக இருப்பதாக அறிந்தேன்.

எந்த நாடும் இப்படி ஒரு உதவியை எங்களுக்கு செய்ததில்லை. கடந்த வருடம் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருந்த எங்களை இந்தியா தான் காப்பாற்றியது. இல்லை என்றால் மீண்டும் ஒரு ரத்தக்களரி நிச்சயமாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும். எப்போதும் எங்களுக்கு உற்ற நண்பனாக இருக்கும் இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறியுள்ளார்.