இந்திய நாடாளுமன்றத்தில் 75 வருட கால பயணம்,  அதில் கிடைத்த அனுபவங்கள்,  பல்வேறு சாதனைகள் மற்றும் மைல்கல்கள்  குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரிலே விவாதம் நடைபெற உள்ளது. அந்த விவாதத்தில் பங்கேற்று முதல் பேச்சாளராக மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.  பிரதமர் பொறுப்பு மட்டுமல்லாமல் மக்களவையிலே லீடர் ஆப்த ஹவுஸ் என்ற பொறுப்பிலும் பிரதமர் மோடி இருக்கிறார்.

ஆகவே அவர் முதல் பேச்சாளராக பேச வேண்டும் என்பது ஆளும் கூட்டணியின் விருப்பம்.  ஆகவே பிரதமர் நரேந்திர மோடி இந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறார். அதேபோலவே மாநிலங்களவையிலே மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த விவாதத்தை தொடங்கி வைப்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை இரண்டு அவைகளிலுமே நாடாளுமன்றத்தின் 75 வருட பயணம் குறித்த விவாதம் நடைபெற உள்ளது.

இந்த விவாதத்துக்காக தான் இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரே கூட்டப்பட்டுள்ளது என அரசு தரப்பிலே  தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், வேறு ஏதேனும் மறைமுகமாக..  திடீரென எடுக்கக்கூடிய நடவடிக்கை இருக்குமா ? என எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நாளை வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படும் தருணத்திலே பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை அமர்வுகள் இடமாற்றம் செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே அதற்கான ஏற்பாடுகளும் தற்போது செய்யப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் இந்த வாரம் முழுவதும் நடைபெற இருக்கிறது. திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. இந்த கூட்ட தொடர்பிலே பல்வேறு நிலுவையில் உள்ள மசோதாக்களை விவாதத்தில் கொண்டு வர வேண்டும் என அரசு திட்டமிட்டு  இருந்தாலும், சர்ச்சைக்குரிய பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க அவகாசம் தேவை என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

ஆகவே மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் நாடாளுமன்றம்கூட இருக்கின்றது. விறுவிறுப்பான விவாதங்களை எதிர்பார்க்கலாம். இந்தியா கூட்டணி தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்திலே ஆலோசனை நடத்த உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே  அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

மத்திய அரசு இந்த சிறப்பு கூட்ட தொடரில் நாடாளுமன்றத்தின் 75 வருட பயணம்,  அதன் சாதனைகள் போன்ற விஷயங்களை மட்டும் விவாதிக்காமல் ஏதேனும் திடீரென யாரும் எதிர்பார்க்காத மசோதாக்கள் கொண்டு வந்து தாக்கல் செய்யுமோ…. என எதிர்கட்சிகள் சந்தேகத்துடன் இருக்கிறார்கள்.ஆகவே தான் அவர்கள் மிகவும் உன்னிப்பாக அரசின் நடவடிக்கை கவனித்து வருகிறார்கள்.

நேற்று கூட அனைத்து கட்சி கூட்டத்தில் வேறு ஏதேனும் அலுவல் இருக்கிறதா ? என பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இதுவரை அரசு நாங்கள் அலுவல் என்ன என்பதை தெரிவித்து இருக்கிறோம். அதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம் என்ற பதிலை அளித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் தொடர்கிறது. அவர்கள் கழுகு பார்வையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அரசு என்ன அலுவல்களை அறிவிக்காமல் கொண்டு வர வாய்ப்பு இருக்கிறதா ? என்பது போன்ற விஷயங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்