உத்தரப்பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது. ஓராய் பகுதியில் உள்ள பெட்ரோல் பம்ப் ஒன்றில், சிமோனா ராஜ் என்பவர் தனது தம்பி ஹிமான்ஷு ராஜுடன் ஸ்கூட்டரில் சென்றபோது, போலீசாருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகனம் பின்னால் மோதியது. இந்த விபத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சாதாரண உடையில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ பிரசாத் துபே தன்னை திட்டினார் என்றும், தம்பியை அடித்து தரையில் தள்ளிவிட்டு, பலமுறை உதைத்தார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

 

இந்த சம்பவம் முழுமையாக அந்த பெட்ரோல் பம்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் வீடியோவை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, போலீசாரின் செயல்முறைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஜலான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் துர்கேஷ் குமாரிடம் புகார் அளித்து, உடனடி நடவடிக்கை கோரியுள்ளார்.

இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் சிவ பிரசாத் துபேவை காவல் கண்காணிப்பாளர் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் துறை ரீதியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கிற எந்த அதிகாரிக்கும் சலுகை இருக்காது எனவும் காவல் கண்காணிப்பாளர் உறுதியாக தெரிவித்துள்ளார்.