பெங்களூருவில் நடந்த அதிர்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், டிவனஹள்ளியிலிருந்து மஜஸ்டிக் செல்லும் BMTC பஸ்ஸில் (KA-57 F-4029) பயணிக்கும்போது, டிக்கெட் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பஸ் கண்டக்டர் அவரிடம் தவறாக நடந்துகொண்டு, கைவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

விவரம் என்னவென்றால், ஹிந்தி பேசும் அந்த இளைஞர் பஸ்ஸில் ஏறியபோது, கண்டக்டர் டிக்கெட் வழங்க வருவார் எனக் காத்திருந்தார். ஆனால் கண்டக்டர் அவரிடம் வரவில்லை என கூறப்படுகிறது. பின்னர் பஸ்சில் செக்கிங் வந்தபோது, டிக்கெட் இல்லாததால் ₹420 அபராதம் விதிக்கப்பட்டது. இது பெரிய வாக்குவாதமாக மாற, கண்டக்டர் தன்னை அறைந்ததாகவும், அதனால் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த இளைஞர் புகார் கூறியுள்ளார்.

இந்த வீடியோவில், “சார், உங்களோட பேரு சொல்லுங்க… நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன்,” என அந்த இளைஞர் கண்டக்டரிடம் கேட்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. “நீங்க என்னை அடிக்க எப்படி முடிஞ்சது?” என அவர் கேட்க, கண்டக்டர் கன்னடத்தில் பதில் அளிக்கிறார். மொழி விவகாரத்தில் கோபமடைந்த பயணி, “இது இந்தியா சார், நாமெல்லாம் இந்தியர்கள்தான்” என பதிலடி கொடுக்கிறார்.

‘HR SINGS’ என்ற X கணக்கில் அவர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். “எதிர்விளைவைப் பயந்து நான் அமைதியாகவே நடந்தேன். எதிராக தாக்கியிருந்தால், என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புண்டு,” என அவர் விளக்குகிறார். தற்போது BMTC வழக்கு பதிவு செய்துள்ளதாக (BMTC2025011158) தெரிவித்தாலும், அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடப்படவில்லை.