சென்னை கடற்கரை ரயில் நிலையம் எப்போதுமே பயணிகளின் கூட்டத்தால் பரபரப்பாகக் காணப்படும். இன்று காலையிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்த நிலையில், திடீரென ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்து கரும்புகையுடன் தீ கொழுந்துவிட்டு எரிந்ததைக் கண்டு பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் மின் கசிவா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் ரயில் நிலையத்தில் நடந்த இந்த விபத்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
