ஐபிஎல் 2026 கிரிக்கெட் களம் இப்போது ஒரு விசித்திரமான சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடந்த எஸ்ஆர்எச் மற்றும் சிஎஸ்கே போட்டியில், கேலரியில் இருந்த ரசிகர் ஒருவர் எலுமிச்சை பழத்தை வைத்து ஏதோ ஒரு மாந்திரீக சடங்கு செய்வது போன்ற வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது.

அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், அவர் அந்த சடங்கை செய்த அதே வினாடியில், அதிரடி வீரர் சிவம் துபே ஆட்டமிழந்து வெளியேறினார். இது தற்செயலான நிகழ்வா அல்லது திட்டமிட்ட மாந்திரீகமா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

 

இந்த விவகாரம் தொடர்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் பிசிசிஐ-க்கு புகார் கடிதம் எழுதியதாக ஒரு செய்தி பரவியது. ஆனால், ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி அது போலி கடிதம் எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம், அவர் ஒரு பகீர் உண்மையை உடைத்துள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, ஒரு அணியின் உரிமையாளர் தனது எதிரணிக்கு எதிராகப் பில்லி சூனியம் செய்ததை தான் நேரில் பார்த்ததாக லலித் மோடி கூறியுள்ளார். “அவர் டிரெஸ்ஸிங் ரூமுக்கே சென்று சில சடங்குகளைச் செய்தார், அது எனக்கு ஆதாரத்துடன் தெரியும்” என அவர் பதிவிட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற சம்பவங்களை மையமாக வைத்து விரைவில் ஒரு படம் அல்லது வெப் சீரிஸ் எடுக்கப்போவதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.