சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த ‘ஹே’ என்ற நபர், தனது முன்னாள் காதலி ‘வாங்’ மீது நீதிமன்றத்தில் தொடர்ந்த வினோத வழக்கு அந்நாட்டு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தரகர் மூலம் அறிமுகமாகி நிச்சயதார்த்தம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து திருமணம் ரத்தானது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது குடும்பத்தினர் பெண்ணின் வீட்டிற்கு வழங்கிய சுமார் 2.30 லட்ச ரூபாய் திருமணப் பரிசைத் திரும்பக் கேட்டதோடு மட்டுமல்லாமல், காதலித்த காலத்தில் அவருக்கு உணவு மற்றும் உள்ளாடைகள் உள்ளிட்ட இதரப் பொருட்களை வாங்கித் தரச் செலவு செய்த சுமார் 3.50 லட்ச ரூபாயையும் (30,000 யுவான்) வட்டியுடன் திரும்பத் தர வேண்டும் என வாதிட்டார்.

குறிப்பாக, தனது காதலி அதிகப்படியாகச் சாப்பிட்டதால் தனக்கு அதிகச் செலவானதாகவும் அவர் நீதிமன்றத்தில் பட்டியலிட்டுப் புகார் அளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், காதலித்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் விருப்பப்பட்டுச் செய்த செலவுகள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாங்கித் தரப்பட்ட பொருட்களுக்கான பணத்தைத் திரும்பப் பெற முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இருப்பினும், திருமண உறுதிமொழிக்காக வழங்கப்பட்ட ஆரம்பக்காலப் பரிசுத் தொகையில் பாதியை மட்டும் (சுமார் 1.15 லட்ச ரூபாய்) பெண்ணின் குடும்பத்தினர் திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட போதிலும், “வாங்கிய உள்ளாடைகளை நான் மட்டுமா அனுபவித்தேன்?” எனப் பெண் தரப்பில் எழுப்பப்பட்ட கேள்வியும், அந்த நபரின் குறுகிய மனப்பான்மையையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

“இவ்வளவு கணக்குப் பார்க்கும் நபர் திருமணமே செய்துகொள்ளாமல் இருப்பதே நல்லது” எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.