கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது தலைமுடியை வித்தியாசமான முறையில் வெட்டி பள்ளிக்கு வந்தார். இதனை பார்த்ததும் தலைமை ஆசிரியர் திருமுருகன் மாணவரை அழைத்துள்ளார். ஆனால் அந்த மாணவர் அங்கும், இங்கும் ஓடியதாக தெரிகிறது. இதனால் சில மாணவர்கள் உதவியுடன் தலைமை ஆசிரியர் அந்த மாணவரைப் பிடித்து எச்சரித்தார். மேலும் தலைமை ஆசிரியர் மாணவரை இரண்டு முறை கையால் அடித்ததாக தெரிகிறது.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் தன்னை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக அந்த மாணவர் புகார் அளித்ததால் சக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தலைமை ஆசிரியர் அறை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த முதன்மை கல்வி அதிகாரி பழனி, மாவட்ட கல்வி அதிகாரி சங்கர், சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் தலைமையாசிரியர் மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பேச்சு வார்த்தைக்கு பிறகு மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.