சென்னை மாவட்டத்தில் உள்ள வீராபுரம், மோரை நியூ காலனியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் சுப்புராயல் உயிரிழந்தார். இதனால் சுமதி ஆவடியில் இருக்கும் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு தனது மகன் தயாளனுடன்(15) வசித்து வருகிறார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தயாளன் தனது தாயிடம் நீண்ட நாட்களாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டு அடம் பிடித்துள்ளார்.

அதற்கு தற்போது பத்தாம் வகுப்பு படிக்கிறாய். நீ நன்றாக படித்தால் செல்போன் வாங்கி தருவேன் என சுமதி கூறியுள்ளார். நேற்று மாலை கிருஷ்ணா கால்வாய் ஓரம் இருக்கும் 80 அடி உயர உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தயாளன் செல்போன் கேட்டு தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரை சமாதானப்படுத்தியுள்ளனர். அப்போதும் அவர் கீழே இறங்கி வர மறுப்பு தெரிவித்தார்.

இதுகுறித்து அறிந்த சுமதி அங்கு சென்று கீழே இறங்கி வருமாறு மகனிடம் கெஞ்சியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் சுமதியை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். தனது தாய் மயக்கம் அடைந்ததை பார்த்த தயாளன் கீழே இறங்கி வந்தார். இதனையடுத்து போலீசார் மாணவருக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.