நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆய்வு குழு என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை கிடப்பில் போடாமல் உடனடியாக நிறைவேற்றி தர அரசு முன்வர வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கைக்கு புதிதாக குழு அமைத்துள்ள தமிழ்நாடு அரசின் செயல் ஏமாற்றமே அளிக்கிறது. கடந்த காலங்களில் திமுக அரசால் அமைக்கப்பட்ட பல்வேறு வெற்றுக் குழுவை போன்று இதுவும் ஏமாற்றம் அளிக்கும் செயலே.

இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவதற்கான வழி தான் குழு. தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதன்பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பம் பெறக்கூடிய அவல நிலையில் இருக்கிறார்கள். இந்த ஊதிய முரண்பாட்டை களைய இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய நிலையில், டிசம்பரில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிந்துரைக்க நிபுணர் குழு அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். அக் குழுவின்  பரிந்துரைகளின் பேரில்தான் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். இது ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கைகளை கிடப்பில் போடும் நடவடிக்கை தான். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது என்றால் அதை நிறைவேற்றுவதற்கு எதற்காக நிபுணர் குழு. ஆய்வு குழு அமைத்து ஆராய்ந்து தான் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமா? மேலும் ஆசிரியர்களின் கோரிக்கையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்று கூறியுள்ளார்.