சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மதுரை பெரியார் பேருந்து நிறுத்தத்தில் வைத்து  பேரணியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆறுமுகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். இதன்பின் பேருந்து நிறுத்தத்தில் உள்ள  பயணிகளிடம் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

இதனையடுத்து ஆறுமுகம் கூறியதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக மதுரையில்  “சாலை பாதுகாப்பு வார விழா” நடத்தவேண்டும்  என  அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில், கடந்த 11-ஆம் தேதி முதல் வருகிற 17-ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த முக்கிய திட்டங்களில் ஒன்று  மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை.  இத்திட்டத்தின் மூலம் மதுரை மண்டலத்தில் தினமும் 5 லட்சம் பெண்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதையடுத்து 500 பேருக்கு மேல் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து சேவை வழங்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இப்பேரணியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் ராகவன், சமுத்திரம், துணை மேலாளர்கள் அறிவானந்தம், ரவிக்குமார், முருகானந்தம், இணை இயக்குனர் பாஸ்கரன், மக்கள் தொடர்பு அலுவலர் சந்தான கிருஷ்ணன், போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர்கள் மாரியப்பன், செல்வின், இன்ஸ்பெக்டர் கணேஷ்ராம் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.