சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை என்ற கிராமத்தில் சன்டி வீரன்சுவாமி கோவில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோவில் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை மாத திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழாவின்போது எந்த நபருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிறப்பு மரியாதையோ எதுவும் செய்யப்பட மாட்டாது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தனி நபர்கள் சிலர், முதல் மரியாதை செய்யக் கோரி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே சிங்கம்புணரி மல்லாக்கோட்டை கிராமத்தில் தைப்பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது, யாருக்கும் முதல் மரியாதை தர கூடாது என்றும், இது தொடர்பாக பிரச்சனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு   உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இது போன்ற வழக்குகள் நீதிமன்றத்திற்கு புதிதல்ல என்றும் கடந்த ஆண்டு ஏற்கனவே இது போன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்துள்ளது என்றும் கூறினார். மேலும் ஏற்கனவே இதுபோன்ற வழக்கிற்கு தீர்ப்பு அளித்தது போல பல்வேறு வழிகாட்டுதல்களை  நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி கோவிலில் யாருக்கும் முதல் மரியாதை செய்வதோ, குடை பிடிப்பது, தலைப்பாகை அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. ஏற்கனவே தெளிவாக உத்தரவிடப்பட்டுள்ளது போல் அனைத்து பக்தர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும். இதையடுத்து முன்பு வழங்கப்பட்ட அந்த உத்தரவுகள் இந்த வழக்கிற்கும் பொருந்தும் என கூறி, நீதிபதி வழக்கை முடித்துள்ளார்.