ஸ்பெயின் நாட்டில் 22 வயது பெண் ஊழியர் ஒருவர், தனது அலுவலக நேரம் தொடங்குவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பே, அதாவது காலை 7.30 மணிக்கு வேலை இருக்கையில் 6.45 அல்லது 7 மணிக்கே தினமும் வந்துள்ளார். இதுகுறித்து அவரது மேலாளர், குறித்த நேரத்திற்கு மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்று பலமுறை வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் எச்சரிக்கை விடுத்தும், அந்தப் பெண் தனது பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து சீக்கிரமாகவே அலுவலகம் வந்துள்ளார்.
இறுதியாக, இது நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் புறக்கணிப்பதாகக் கருதி, அந்தப் பெண் ஊழியரை நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னைத் தவறாகப் பணிநீக்கம் செய்ததாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் வாதாடிய நிறுவனம், அந்த ஊழியர் இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்ட பின்னரும் சுமார் 15 நாட்களுக்குத் தொடர்ந்து முன்னதாகவே அலுவலகம் வந்ததாகவும், அலுவலகத்திற்கு வராமலேயே வருகைப்பதிவு செயலியில் உள்நுழைய முயன்றதாகவும் கூறியது.
மேலும், குறித்த நேரத்தில் வேலை செய்யுமாறு அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியது தான் உண்மையான பிரச்சனை என்றும், அவருடைய இந்தச் செயல் குழுவின் ஒட்டுமொத்தப் பணியையும் பாதித்தது என்றும் தெரிவித்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஊழியரின் இந்த நடத்தை, ஸ்பெயின் தொழிலாளர்கள் சட்டத்தின் 54 பிரிவின் கீழ் வரும் விதிகளை மீறிய ஒரு தீவிரமான ஒழுங்கீனச் செயல் என்று கூறி, நிறுவனத்தின் பணிநீக்க நடவடிக்கையைச் சரியானது எனத் தீர்ப்பளித்தது.
எனினும், நீதிமன்றத்தின் இந்த முடிவில் திருப்தியடையாத அந்தப் பெண், தான் தவறாக நீக்கப்பட்டதாகவும், உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றும் கூறி, தற்போது வலென்சியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
