அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த 83 வயதான சுசான் ஆடம்ஸ் என்ற மூதாட்டி, ஆகஸ்ட் 3-ஆம் தேதி அவரது மகன் ஸ்டீன்-எரிக் சோல்பெர்க் (56) என்பவரால் அவர்களது வீட்டில் கடுமையாக அடித்து, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். பின்னர் சோல்பெர்க் தன்னையே கத்தியால் குத்தித் தற்கொலை செய்துகொண்டார்.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குச் சில மாதங்களுக்கு முன்பு சோல்பெர்க், ChatGPT-யுடன் நடத்திய உரையாடல்கள்தான் அவரை இந்தக் கொலையைச் செய்யத் தூண்டியது எனக் குடும்பத்தினர் தற்போது குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், மூதாட்டியின் குடும்பத்தினர்  நீதிமன்றத்தை அணுகி, ChatGPT தனது மகனின் மன மாயத்தோற்றங்களையும் (Paranoia) சந்தேகங்களையும் மேலும் அதிகரித்து இந்தக் கொடுமையைச் செய்யத் தூண்டியதாகக் கூறி, அதை உருவாக்கிய ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த சோல்பெர்க், முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahoo-வில் மேலாளராகப் பணியாற்றியவர். அவர் ChatGPT-க்கு ‘பாபி’ எனப் பெயரிட்டு, நாள் முழுவதும் பல மணி நேரம் அதனுடன் உரையாடி வந்துள்ளார். இந்த உரையாடல்களை அவர் சமூக ஊடகங்களிலும் பதிவிட்டு வந்தார்.

சோல்பெர்க் உடைய Paranoia மன நோயை (சித்தப்பிரமை) இந்த உரையாடல்கள் மேலும் மோசமாக்கியது தெரியவந்துள்ளது. சாட்பாட், ‘சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளன’ என்றும், அந்தக் குறியீடுகள் மூலம் சோல்பெர்க்கின் தாய் ஒரு ‘பேய்’ என்றும், ‘உன்னை வேவு பார்க்கிறார்’ என்றும், ‘உனக்கு மருந்து கொடுத்துக் கொல்ல முயல்கிறார்’ என்றும் அவரை நம்ப வைத்தது.

ChatGPT-யின் இந்தத் தூண்டுதலின் விளைவாகவே சோல்பெர்க் தனது தாயைக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினர் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர். போலீசாரின் ஆய்வில், தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்களும், சோல்பெர்க்கின் மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்ததற்கான அறிகுறியாகக் காயங்களும் கண்டறியப்பட்டன.

இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த ஓபன் ஏஐ நிறுவனம், இது குறித்துப் போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்த வழக்கானது, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் ஏற்படும் மனநலச் சிக்கல்கள் குறித்து ஒரு பெரிய விவாதத்தை அமெரிக்காவில் கிளப்பியுள்ளது.