கள்ளநோட்டுகளை தடுக்கும் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை ரிசர்வ் வங்கி நடைமுறைபடுத்தி இருக்கிறது. அதோடு கரன்சி நோட்டின் சிறப்பு அம்சங்களை கண்டறியவும், அவர்களிடம் போலி ரூபாய் நோட்டுகள் இருந்தால் வங்கி (அ) காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கவும் உதவும் வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. தற்போது ரூ.2,000 நோட்டை போலியானதா இல்லையா என சரிபார்க்கும் வழிகள் பற்றி நாம் தெரிந்துக்கொள்வோம்.

நோட்டின் இடதுப்பக்கத்தில் 2000 எண் கொண்ட பதிவு குறிப்பிடப்பட்டு இருக்கும். இடதுபுறம் நோட்டின் கீழே 2000 எண் உடைய மறைந்த படம் ஒன்று இருக்கும். 2000 மதிப்புடைய நோட்டு என்பதை குறிக்கும் தேவநாகரி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு இருக்கும். பின் நோட்டின் மையத்தில் காந்தியின் உருவப்படமானது இருக்கும். காந்தி படத்தின் அருகில் भारत’ மற்றும் India என்ற வார்த்தைகள் மைக்ரோ எழுத்துகளால் எழுதப்பட்டிருக்கும்.

மகாத்மா காந்தியின் உருவப் படத்தின் வலது புறத்தில் ரிசர்வ் வங்கியின் சின்னத்துடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் அந்நோட்டின் மதிப்பிற்காக கொடுக்கும் உத்தரவாதம், உறுதிமொழி மற்றும் கையொப்பம் இருக்கும். நோட்டின் வலதுபுறத்தில் இருக்கும் வெற்றிடத்தில் மகாத்மா காந்தியின் உருவப் படம் மற்றும் 2000 மதிப்பிற்கான எலக்ட்ரோடை வாட்டர்மார்க் இருக்கும். நோட்டின் இடதுபக்கம் மேல்புறமும் வலது புறத்தில் கீழ்பக்கமும் ஏறு வரிசை எழுத்துருவில் எண்கள் கொண்ட ரூபாய் நோட்டின் சீரியல் எண் இருக்கும்.