டெல்லியில் முதல்வராக ரேகா குப்தா செயல்பட்டு வருகிறார். இவருக்கு ராஜ் நிவாஸ் மார்க்கில் 2 பங்களாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒன்று வசிப்பதற்காகவும், மற்றொன்று அலுவலகப் பணிகளை செய்வதற்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தது. அலுவலகம் கடந்த ஆண்டு திறக்கப்பட்ட நிலையில் தற்போது குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட பங்களாவில் புதுப்பிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதற்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் 14 ஏர் கண்டிஷனர்கள், மற்றும் 5 LED தொலைக்காட்சிகள் வைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு விளக்கு அமைப்பிற்காக மட்டுமே 6 லட்சத்திற்கும் அதிகமான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதுப்பித்தலின் முதல் கட்டுமான பணிகள் ஜூலை மாத நடுப் பகுதியில் தொடங்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை டெண்டர் வெளியிட்டது.

அதன்படி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தற்போது ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் பல விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகிறது. அதாவது பள்ளி கட்டண உயர்வு, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் முதலமைச்சர் வீண் செலவுகளை செய்கிறார் என்று கடுமையாக விமர்சித்திருந்தனர். இதைத்தொடர்ந்து டெல்லி அரசு புதுப்பித்தல் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறியது. மேலும் இதே போன்று கடந்த பிப்ரவரி சட்டமன்ற தேர்தலின் போது ஆடம்பர பங்களாவில் கெஜ்ரிவால் வசித்து வருகிறார் என்று பாஜக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.