மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள தடோபா அருகில் இருக்கும் சந்திரபூர்-மோஹர்லி சாலையில் ஒரு அரிய, அதேசமயம் ஆபத்தான சம்பவம் நடந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி இருக்கும் இந்த சாலையில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம். இந்தச் சூழலில், ‘மது’ என்ற பெண் புலியின் குட்டி நடுரோட்டில் அமைதியாக மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்ததால், அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நின்றது.

உள்ளூர்வாசி ஒருவர் எடுத்த இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. வாகனங்களுக்கு உள்ளே இருந்த சுற்றுலாப் பயணிகளும், கிராம மக்களும் அந்தப் புலி தானாக நகரும் என்று பொறுமையாகக் காத்திருந்தனர். தடோபா பஃபர் மண்டலத்தில் நடந்த இந்தச் சம்பவம், மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையேயான சிக்கலான உறவை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Akash Alam (@tiger_dekhna_hai_tadoba_aajao)

இந்தப் பகுதியில் அடிக்கடி புலி நடமாட்டம் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் ஆபத்து உள்ளது. சாலையில் செல்லும் போது ஹார்ன் அடிக்கக் கூடாது, வாகனங்களில் இருந்து வெளியேறக் கூடாது, மற்றும் மெதுவாகச் செல்ல வேண்டும் என்றும் வனத்துறை தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. வன விலங்குகளின் வாழ்விடத்தைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகிய இரண்டும் இங்கு சம அளவில் முக்கியமானதாக உள்ளன.