மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா, தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டது அவரது குடும்பத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகளைத் தேடி அலைந்த பெற்றோருக்கு இந்தத் தகவல் தெரியவந்ததும், அவர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர். மகளின் இந்த முடிவை ஏற்க முடியாத குடும்பத்தினர், “எங்கள் மகள் எங்களுக்கு இறந்துவிட்டாள்” என்று கூறி, அவருக்கு அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்கு நடத்த அதிரடியாக முடிவு செய்தனர்.
அதன்படி, கவிதாவைப் போலவே மாவுப்பொருள் கொண்டு ஒரு உருவப்பொம்மையைச் செய்த குடும்பத்தினர், அதனைப் பாடையில் வைத்து ஊர்வலமாக மயானத்திற்குக் கொண்டு சென்றனர்.
அங்கு பாரம்பரிய முறைப்படி சிதை அடுக்கி, அனைத்து சடங்குகளையும் செய்து உருவப்பொம்மைக்குத் தீ வைத்தனர். தனது மகளின் இந்த செயலால் குடும்பமே உடைந்துவிட்டதாகவும், இது தனது வாழ்வின் மிகவும் வேதனையான தருணம் என்றும் கவிதாவின் தந்தை ராம்பாபு கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மகளுக்கு உயிரோடு இருக்கும்போதே தந்தை இறுதிச்சடங்கு நடத்திய இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
