உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில், வார இறுதி நாட்களில் பணிபுரிய மறுத்ததற்காக 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மூத்த அதிகாரி ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க ஈ-காமர்ஸ் செயல்பாடுகளைக் கவனிப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த அந்த ஊழியர், உடல்நலக் குறைவு காரணமாகத் சனிக்கிழமை அன்று வேலைக்கு வர முடியாது என்று மேலதிகாரியிடம் முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.

ஆனால், திங்கள்கிழமை அவர் அலுவலகம் சென்றபோது, “வேலையில் சுணக்கம்” எனக் கூறி அவரை ராஜினாமா செய்யுமாறு அல்லது பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் நிர்வாகம் மிரட்டியுள்ளது. அந்த ஊழியர் தற்போது தகுதிகாண் பருவத்தில் இருப்பதால், அவரை உடனடியாக வெளியேறச் சொன்ன இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்த்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட மேலதிகாரி எதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட இலக்குகளை நிர்ணயித்ததாகவும், தொடர்ந்து கூடுதல் நேரம் மற்றும் வார இறுதி நாட்களில் வேலை செய்ய வற்புறுத்தியதாகவும் அந்த ஊழியர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து நிறுவனத்தின் நிறுவனர்களிடம் முறையிட்டும் எவ்விதப் பலனும் இல்லை என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தனது குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருக்கும் நிலையில், இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு ஏற்பட்ட இந்தச் சூழல் குறித்து நெட்டிசன்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருப்பதாகவும், ஊழியர்களைத் தகுதிகாண் பருவத்தைப் பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றும் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.